பெங்களூரு: கர்நாடக பா.ஜ. தலைவர் எடியூரப்பாவால், அம்மாநிலத்தின் ஒரு சாதாரண குடும்பத்திற்கு ரூ.11,000 தண்டச் செலவு ஏற்பட்டுள்ளது. அக்குடும்பத் தலைவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்து செய்யும் செயல்கள் மட்டுல்ல, அவர்கள் வேறுவகையில் செய்யும் பல செயல்கள்கூட, மக்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும், காமெடி கூத்துகளாகவுமே இருக்கின்றன.
கடந்தாண்டு நடந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலின்போது, லக்ஷ்மன்புரி என்ற ஒரு குடிசைப் பகுதியில் ஒரு நாள் தங்கி, ஸ்டன்ட் அடிக்க முடிவு செய்தார் எடியூரப்பா. அதற்காக அவர் தேர்வுசெய்தது, முனிரத்னா என்ற ஆட்டோ ஓட்டுநரின் இல்லம்.
அந்த வீட்டில் இந்திய முறையிலான கழிவறை அமைப்புதான் இருந்தது. ஆனால், அது தனக்கு சரிபட்டு வராது என்பதால், மேற்கத்திய பாணி கழிப்பறை அமைப்பாக மாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார் எடியூரப்பா.
பாரதீய ஜனதாவினர் செலவில், அக்குடும்பத்தின் கழிப்பறை அமைப்பு மாற்றப்பட்டது. அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை நேரடியாக சென்று அறிந்துகொள்ளப் போகிறேன் என்று புறப்பட்ட எடியூரப்பா, ஒருநாள் மட்டுமே அந்த வீட்டில் தங்கிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
ஆனால், மேற்கத்திய பாணியிலான கழிவறை அமைப்பு, முனிரத்னா குடும்பத்தினருக்கு ஒத்துவரவில்லை. எனவே, அதை மீண்டும் இந்திய அமைப்பில் மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தக் கழிவறை மீள்மாற்றத்திற்கு அவர்கள் ரூ.15,000 செலவழிக்க வேண்டியிருந்தது. பாரதீய ஜனதாக் கட்சியினரிடம் சென்று முறையிட்டபோது, இதைப் பெரிதாக பொருட்படுத்தாத அவர்கள் தந்தது, வெறும் ரூ.4000 மட்டுமே. ஆக, எடியூரப்பாவின் ஒருநாள் கூத்துக்கு அந்த எளிய குடும்பம் தந்த விலை ரூ.11,000.
பாரதீய ஜனதா தலைவர்கள் எதை செய்தாலும், அதன் விளைவுகள் இப்படித்தான் ஆகின்றன என்றால், யார்தான் என்ன செய்ய முடியும்..!
– மதுரை மாயாண்டி