சென்னை: தவெக தலைவர்பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்க கேட்கப்பட்ட அனுமதிகளை திமுக அரசு மறுத்து வரும் நிலையில், எங்களின் செயல்பாடுகளை கண்டு வெற்று விளம்பர மாடல் திமுக அரசுஅஞ்சி நடுங்குகிறது என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே மடப்புரம் அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தபோது, அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அதுபோல தவெகவின் பல்வேறு போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அதன் தொடக்க விழா திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருச்சியில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தரப்பில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம் என்பதால், அங்கு அனுமதி கொடுத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து கடிதம் கொடுக்கப்பட்டது. அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எதிர்த்து, தவெக தரப்பில் நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.
இதற்கிடையில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர் விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்குக் காவல் துறையில் அனுமதி கேட்கும் கடிதத்தைக் கோவிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குத் திரண்டனர். அதாவது த.வெ.க. நிர்வாகிகள் பலர் திருச்சி – புதுக்கோட்டைச் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், சட்ட விரோதமாக ஒன்று கூடிப் பிரச்சனை செய்ததன் காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுழுக்கு கரிகாலன், அக்கட்சியின் நிர்வாகிகளான வெள்ளைச்சாமி, துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியர்களின் உத்தரவைப் பின்பற்றாமல் நடப்பது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை விஜய் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர்.என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரச்சாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர்என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்’
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.