புதுடெல்லி: உலகின் பிரபல பத்திரிகைகளுள் ஒன்றான ‘த எகனாமிஸ்ட்’ என்ற பத்திரிகை, நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா, ஜனநாயகத்திற்கான ஆபத்து என்று வர்ணித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின்போதே, இப்பத்திரிகை, காங்கிரசுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும், அன்றைய சூழலில் மக்கள் யாரும் அதைக் கேட்க தயாராக இல்லை.

ஆனால், இந்தமுறை அதே கோரிக்கையை அப்பத்திரிகை முன்வைக்கவில்லை. மாறாக, இத்தேர்தலை ‘இந்தியாவின் ஆன்மாவிற்கான போராட்டம்’ என்பதாக சித்தரித்துள்ளது.

அப்பத்திரிகையில் இடம்பெறும் தலைவர் எனும் பகுதியில், ‘மோடியின் தலைமையிலான ஆளுங்கட்சி, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாய் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் மிகவும் கடினமானவையாகவும், படிப்போருக்கு அச்சத்தை தருவதாயும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வார்த்தைகளில் சிலவற்றை நாமும் பார்க்கலாமே;

“வெறுக்கத்தக்க, அபாயகரமான, கொடூரமான, பேரழிவான, தனிமைப்படுத்தக்கூடிய, கொடுமைப்படுத்தவல்ல, அடக்கக்கூடிய, வேட்டையாடத்தக்க, மூர்க்கத்தனமான, ஒழுக்கமற்ற, மிதமிஞ்சிய” உள்ளிட்ட வார்த்தைகள்தான் அவை.

இந்த வார்த்தைகள் யாருடைய ஆட்சியைக் குறிப்பன என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்து தேசியத்திற்கான மோடியின் கடுந்தன்மை வாய்ந்த அடையாளம் என்பது பாகிஸ்தான் என்ற நாட்டை ஒரு வியூக எதிரியாக குறைவான அளவில்தான் அடையாளப்படுத்துகிறது. மாறாக, அது நாகரீகம் என்பதைத்தான் பெரிய எதிரியாக முன்னிறுத்துகிறது.

இந்த நிலையானது, மோடியின் சொந்தக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியிலேயே அவரை ஒரு விளிம்பில் கொண்டு வைத்துள்ளது. இந்துத்துவா இயக்கம் என்பது தற்போது மதிப்பிடும் கணத்தை எதிர்கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி