சென்னை: மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்து, இளைஞர்களை சீரழித்து வருகிறது திமுக அரசு, என பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக கூட்டணி சார்பில், ஐ.ஜே.கே கட்சி தலைவர் பாரிவேந்தரும், அதிமுக வேட்பாளராக சந்திரமோகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில், தேன்மொழியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, கடந்த 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார்.
தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசியவர், திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டது என்று சாடியவர், ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்தில், பொதுமக்களிடையே பேசிய பாரிவேந்தர், வேங்கடத்தானூருக்கு எம்.பி. நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார்.
பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும், சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது, ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்த, செங்காட்டுப் பட்டி கிராமத்தில் பேசியபோது, தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்தவொரு எம்.பி.யும் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.