சென்னை:
தமிழகத்தில் மலரக்கூடிய திமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று, கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை சந்தித்த ஸ்டாலின் கூறினார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ இன்று 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பலர் கைது செய்யப்பட்ட நிலையிலும், போராட்டத்துக்கு வரும் வழியிலேயேயும் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அழைத்துச்சென்ற போலீசார், எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் அடைத்துவைத்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனானி அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்தார்.
இது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுதான் இந்த மரணத்துக்குபொறுப்பேற்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தியாகராஜனின் உடலை பாபநாசம் கொண்டு செல்லும் முயற்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மக்களைப் பற்றியோ அரசு ஊழியர்களைப் பற்றியோ, ஆசிரியர்களைப் பற்றியோ கவலைப்படாத ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் விரைவில் மலரக்கூடிய ஆட்சியின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது. அவர்கள் போராட்டம் அறிவித்தவுடன், அவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும், போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது , அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காவல்துரையினர் கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல் என்று கூறிய ஸ்டாலின், அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளைபோல் வலைவீசி தேடி கைது செய்வதா என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை விளம்பரம் செய்து ஜெயக்குமார் இழிவுப்படுத்துகிறார் என்றும் துப்பாக்கி , தடியை காட்டி அரசு ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முதல்வர் பகல் கனவு காண்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை உணர மறுக்க கூடாது என்றும் ஸ்டாலின் கூறினார்.