டெல்லி: எனக்கு, அரசியலமைப்புச் சட்டம்தான் உச்சம், நாடாளுமன்றம் அல்ல என்று கூறிய இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்  “அரசியலமைப்பே நாட்டின் உச்சபட்சம்; பார்லிமென்ட் உள்ளிட்ட பிற ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகள்  என்றவர்,  காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது  என்றும்  தெரிவித்துள்ளார்.

நாட்டின், 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்தமே மாதம் (14 May 2025) 14ந்தேதி பொறுப்பேற்றார்.  இதையடுத்து அவர் அவரது சொந்த ஊரான மஹாராஷ்டிராவின் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அரசியல் சாதனம், உச்சநீதிமன்றம், பாராளுமன்றம், காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார். அவர் பேசியதாவது,

ஒருசிலர் பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்பே முதன்மையானது. நிர்வாகம், சட்டசபை அல்லது நீதித் துறை ஆகிய ஜனநாயக அமைப்புகளில் எந்த அமைப்பு உயர்ந்தது என்ற விவாதம் எப்போதுமே இருந்து வருகிறது. ஆனால்,  இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் அதன் கீழ்தான் செயல்படுகின்றன. அரசியலமைப்பை திருத்துவதற்கு தான் பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும். அவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பதால் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. தன் தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பர் என்பதை கருதி ஒரு நீதிபதி செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வர் என்பது நம் முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு (காஷ்மீர் மாநிலம்) என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என  தெளிவுபடுத்தியவர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஆதரித்த அதே வேளையில், அம்பேத்கரின் ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையிலிருந்து சுப்ரீம் கோர்ட் உத்வேகம் பெற்றது. அம்பேத்கர் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே அரசியலமைப்பைக் கற்பனை செய்தார், ஒரு மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட  370வது விதி தற்காலிகமானதே. அதை 2019ல் இதை ரத்து செய்தது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான் .இந்த மாற்றம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்து நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தியது என்றார்.

நான் தனிப்பட்ட முறையில், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலை நிறுத்தியுள்ளேன். என் தீர்ப்புகள் மற்றும் பணிகள் இதையே காட்டும். நான் ஒரு கட்டட கலைஞர் ஆக விரும்பினேன். ஆனால், என்னை வழக்கறிஞராக பார்க்க என் தந்தை ஆசைப்பட்டார். ஏனென்றால், அவருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று கைதானதால், அது முடியாமல் போனது.

இவ்வாறு கூறினார்.