உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், “இது உறுதியற்ற காலம். ஆனால் இந்த உலகளாவிய சவால்களை நாம் ஆஸ்திரேலிய முறையில் சமாளிப்போம். ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கடந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய உரையில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏற்கனவே இரண்டாவது மாதமாக நீடித்து வரும் ஈரான் போரின் தாக்கம் உலக வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்பதால், எதிர்கால சவால்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கும் வகையில் இந்த உரை அமைந்தது.

மேலும், ஈஸ்டர் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்ட பிரதமர், விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பும் போது பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

“வரும் வாரங்களில் சாத்தியமானால் ரயில், பேருந்து அல்லது டிராம் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள். அது எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கும். கார் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு அது உதவும்” என்று அவர் கூறினார்.

அதேபோல், தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்க வேண்டாம் என்றும், பிறரின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் போரின் காரணமாக உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த நிலையை சமாளிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் உறுதியளித்தார்.

“திங்கட்கிழமை தேசிய அமைச்சரவை, தேசிய எரிபொருள் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை நீண்டகாலமாக மூடப்பட்டாலும், நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதபடி தயாராக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “இன்று எரிபொருள் வரியை பாதியாகக் குறைத்துள்ளோம். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 சென்ட் வரி குறைக்கப்பட்டுள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]