டெல்லி: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்தியஅரசு கொள்கைஅளவில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்து உள்ளார்.

சென்னையின் பரந்தூரில் அமைக்கப்பட உள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு புதன்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தார். இந்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழக அரசால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் சமர்பித்திருந்தது. இந்தத் திட்டம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டிருந்தது. இதை ஆய்வு செய்த, மத்தியஅரசு, பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் விமான போக்குவரத்து துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைய உள்ளது. இதற்காக பரந்தூரில் 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த இர ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்ட அனுமதிக்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இதனை பரிசீலித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்ட அனுமதிக்குக் கொள்கை அளவிலான ஒப்புதலைத் தற்போது வழங்கி இருக்கிறது.
இடத்திற்கான அனுமதி ஏற்கெனவே கிடைத்த நிலையில் தற்போது திட்டத்திற்கான ஒப்புதலும் கிடைத்திருப்பதால், அரசு விரைவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, விமான நிலைய கட்டுமானப் பணிகள் 2026 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டால், 2028-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.