கோவை:
தமிழகத்தில் பான்மசாலா, குட்கோ போன்ற போதை பாக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை அருகே இயங்க வந்த பான்மசாலா தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குட்கா வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையின்போது, கோவை சூலூர் அருகே சட்ட விரோதமாக இயங்கி வந்த பான்மசாலா ஆலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பல கோடி மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 15 அடி உயர சுற்றுச்சுவர் கொண்ட பழைய துணி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் பான்மசாலா தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலாககள் இருப்பதை அறிந்த போலீசார், அவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, சூலூர் தாசில்தார் சதாசிவம், மதுவிலக்கு போலீஸார் மற்றும் ரகசிய பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் ஆலையில் விடிய விடிய சோதனை நடத்தியதாகவும், பான் மசாலா ஆலையின் மேலாளர் ரகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.