டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.ஹ
காவிரி ஒழுங்காற்று குழு நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2, 600 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்த நிலையில் நவம்பர் 3ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவதாகவும், இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 4 மாநில அதிகாரிகளுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும் கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.
இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு நேற்று (அக்டோபர் 30ந்தேதி) கூடியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2, 600 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது. கர்நாடக அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி, நவம்பர் 1 முதல் 23 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (சிடபிள்யூஆர்சி) கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, வருகின்ர நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை காரைக்காலுக்கு 165 கனஅடி வீதம் தமிழகம் திறந்துவிட வேண்டும் என்றும் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. கமிட்டியின் அடுத்த கூட்டம் நவம்பர் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் நவம்பர் 3ம் தேதி கூடுகிறது.
முன்னதாக, CWRC தலைவர் வினீத் குப்தா TNIE இடம் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களை காப்பாற்ற 11 டிஎம்சி அடி நீர் தேக்கத்தை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாது என கர்நாடகா கூறியுள்ளது.
23 நாட்களுக்கு 2,600 கனஅடி வீதம் போதிய அளவு ஒதுக்கீடு இல்லை என்றும், டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களைக் காப்பாற்ற 15 நாட்களுக்கு தினமும் குறைந்தது 13,000 கனஅடி வீதம் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகக் குழுவினர் கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) CWRCயின் உத்தரவு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கும்.