கொழும்பு:

லங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டமே  இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு காரணம்  என்று  இலங்கை அரசு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 310 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ருது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், இலங்கை அரசு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக  அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜித சேனரத்னே கூறுகையில்,  குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. அதை நாங்கள் அலட்சியப்படுத்தியதற்காக, நாங்கள் மிக மிக வருந்து கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது. இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.