புதுடெல்லி:
ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 3 – ம் தேதி மாயமான ஏ.என்.32 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் ஒரு பகுதி நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் அதில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடல்களை அருணாச்சலப்பிரதேச மாநில தலைநகருக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
கடந்த 3 -ம் தேதி அசாமின் ஜோர்கட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெச்சுக்கா ராணுவ தளத்திற்கு சென்ற இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவில்லை.
50 நிமிடத்தில் வரவேண்டிய விமானம் வராததால், அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 12 ஆயிரம் அடி உயரத்தில், மோசமான வானிலை காரணமாக, மலையில் மோதி நொறுங்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்துள்ள நிலையில், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர், விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபத்தான மலைத்தொடர் மற்றும் இடைவிடாத மழையால் விமானத்தை தேடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 5 பேர் பொது மக்கள் என விமானப் படை தெரிவித்துள்ளது.
கருப்புப் பெட்டி மற்றும் 13 உடல்கள் தனி விமானம் மூலம் மாநில தலைநகருக்கு கொண்டு வரப்படுகிறது.