டில்லி:

பாரதியஜனதா கட்சியின்  அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 5ந்தேதி முதல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாஜக தலைமை அறிவித்திருந்தாலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதுகுறித்து கலாய்த்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  மத்தியில் ஆளும் கட்சியின் இணையதளம் முடக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் தொடர்பான தகவல்கள், மோடி, அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களின் சுற்றுப்பயண விவரங்கள், அவர்கள் பிரசார படங்கள், கட்சியின் செயல்பாடுகள் போன்றவை அவ்வப்போது கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 நாட்களாக இணைய தளம் முடங்கி கிடப்பது பாஜக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 5ந்தேதி அன்று  ‘எரர் 522’ தோன்றியது. வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து இணையதளம் செயல்படுவது நின்று போனது. ஹேக்கர்களால் இணையதளம் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இணைய தளத்தை மீட்க பாஜக தொழில்நுட்பக்குழு உள்பட பல தொழில்நுட்ப குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்,  விரைவில் இணையதளம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இணையதளம் இன்றுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் இணையதள தொழில்நுட்ப குழுவினர்,   பாஜக இணையதளத்தை நாங்கள் எழுப்பி விடவா? என நக்கலடித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தனது கட்சியின் இணையதளத்தையே பாதுகாக்க முடியாத மோடி, நாட்டை எப்படி காப்பாற்றுவார் என்று நெட்டிசன்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடப்பட்டும், பாஜகவை கலாய்த்து வருகின்றனர்.