திருவனந்தபுரம்:

கேரளாவில் நடந்த ஆசிய கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ மாநாடு கேரளா மாநிலம் கொல்லஞ்சேரி அருகே மாராமன் என்ற இடத்தில் பம்பை நதிக்கரையோரம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. லட்சகணக்கான மக்களை கொண்ட மார் தோமா சுவிசேஷ சங்கம் இந்த மாநாடுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

லட்சகணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு 4 அமர்வுகளாக நடக்கிறது. இதில் இரவில் நடக்கும் ஒரு அமர்வுக்கு பெண்கள் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

மாநாட்டின் தொடக்க விழாவில் அந்த அமைப்பின் தலைவர் ஜோசப் மார் தோமா பேசுகையில்,‘‘ மீடியாக்களின் கவனத்தை தங்களது பக்கம் ஈர்க்க வேண்டும் என்று சிலர் இங்கே இருக்கிறார்கள். தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி அவர்களின் பெயர் பத்திரிக்கைகளிலும், அவர்களது முகத்தை டி.வி.க்களிலும் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு அளாதி பிரியம்’’ என்று குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,‘‘இந்த மாநாட்டு மூலமும் அந்த ஆதாயத்தை தேட அவர்கள் முயற்சி செய்துள்ளனர். மாநாட்டில் நடக்கும் 4 அமர்வுகளில் பெண்கள் கலந்துகொள்ளலாம். பாதுகாப்பு கருதி இரவில் நடக்கும் ஒரு அமர்வுக்கு பெண்கள் அனுமதிக்கவில்லை. இதை மாற்றப்போவதில்லை. ஆனால் இதை ஏதோ பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர். இது தடையல்ல. உரிமை பறிப்பும் கிடையாது. பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு’’ என்று அவர் தெரிவித்தார்.

‘‘பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமைப்பை நாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்பதை சிலர் மறந்துவிட்டனர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதன்முதலில் அளித்தது நாங்கள் தான்’’ என அவர் பேசினார்.

முன்னதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மார் தோமா தேவாலயத்தின் கீழ் செயல்படும் ‘நவீகெரன வேதி’ என்ற அமைப்பினர் இந்த பிரச்னையை தேவாலய கூட்டத்தில் கிளப்பினர். இரவு அமர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று மக்களின் ஆதரவை பெற இவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த அமைப்பு தேவாலயத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.