திருவாரூர்:
திருவாரூர் அருகே ஆற்றங்கரையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் குவியலாக கிடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதார் அட்டைகளை ஆற்றியில் வீசியது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் ஊழியர்களே ஆதார் அட்டைகளை ஆற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இதன் காரணமாக ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாகி உள்ளது. இந்த கார்டை பெறுவதற்காக மக்கள் பலமுறை அலைக்கப் பட்டனர். இருந்தாலும் இன்னும் பலருக்கு ஆதார் கார்டு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள நாகலடி, கோட்டகம் பகுதி ஆற்றங்கரை தெரு அருகில் முள்ளியாற்றில் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் குப்பைகள் போல குவிந்து கிடந்தன.
இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவிய நிலையில், சம்பவ இடத்துக்கு துணை வட்டாட்சியர், வி.ஏ.ஓ வருகை தந்து பார்வையிட்னர்.
இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் ஆதார் கார்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆற்றில் கிடந்த ஆதார் கார்டுகள் அனைத்தும், அருகிலுள்ள கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்குரியது என்பது தெரிய வந்தது.
ஆதார் நிறுவனம் தபால்மூலம் அனுப்பிய அந்த ஆதார் அட்டைகளை தபால்காரர்கள், மக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்காமல், ஆற்றில் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது.
மக்கள் சேவையாற்றும் தபால் துறையினர், இதுபோன்று மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.
ஆதார் கார்டுகளை ஆற்றில் வீசிய தபால்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அரசியல் கட்சிகளிள் கையில் எடுத்து, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.