டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் அடுத்த வாரம் கூடுகிறது. ஜுன் 27ந்தேதி அன்று டெல்லியில் கூடும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்து உள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (CWMA) உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகமை, கேரளம், புதுச்சேரி ஆகிய காவிரி ஆறு பாயும் மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் நீர் வளங்களை நிர்வகிக்க இந்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் சூன் 1, 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவராக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்தர் இருக்கிறார். அத்துடன் தமிழ்நாடு, கர்நாடக, புதுச்சேரி,கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
எஸ்.கே. ஹால்தர் தலைமையில் இந்த கூட்டம் அவ்வப்போது கூடி, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக விவாதித்து உத்தரவை பிறப்பிக்கும். கடந்த 40வது ஆணைய கூட்டம் மே 22ந்தேதி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் 41வது கூட்டம், டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக மாநிலம், திறந்துவிட வேண்டிய காவிரி நீர் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில், கூட்டம், காவிரி பாசனப் பகுதிகளில் நீர் பகிர்வு மற்றும் மேலாண்மை தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், நீர் திறப்பு குறித்து முடிவு செய்யும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு 31.24 டி.எம்.சி (தொடர் மில்லியன் கன அடி) நீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும், அதை கருத்தில் கொண்டு கூட்டம் நடைபெற உள்ளது.