தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு  தட்சிணாமூர்த்தி விசேஷம் – குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம்.

ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. விசேட மூர்த்தி அருள்மிகு குருதட்சிணாமூர்த்தி உள்பிரகாரங்களில் கலங்காமல் காத்த விநாயகர், முருகன், லெட்சுமி, நால்வர், சூரியேசர், சோமேசர், குருமோசேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணு நாதர், பிர்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு காசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்தியர் முதலியவரும் உள்ளனர்.

ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், பெரிய வடிவோடுகூடிய விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த மாதாக்கள் முதலிய உற்சவமூர்த்தங்களும் உள்ளன. சபாநாதர் சன்னதியில் திருமுறைக் கோயில் உள்ளது. உற்சவ தட்சிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சிதருகின்றனர்.

சுவாமி மகாமண்டபத்தில் நந்தி பலிபீடம் செப்புத் திருமேனியுடன் உள்ளது. மகாமண்டப வாயிலில் துவகர பாலகர்களும் உளர். ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். மேற்கில் இலிங்கோற்பவரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் உளர். “ஞான கூபம்’ என்னும் தீர்த்தக் கிணறு உள்ளது. சுக்கிரவார அம்மன் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, வசந்த மண்டபம், சப்தமாதா ஆலயமும் உள்ளன. இத்தலத்தின் கிழக்கே “பூளைவள ஆறு’ பாய்கிறது. ஐப்பசியில் இதன் தீர்த்தத்தைக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

பிரார்த்தனை:

நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது.

தெட்சிணாமூர்த்தியே இங்கு குருவாய் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள். விசுவாமித்திரர் வழிபட்ட தலம். ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக்காத்தபிரான் உள்ள தலம். இதனால் ஆலங்குடி என்றாயிற்று என்பர். இதற்குச் சான்றாகச் சொல்லப்படும் காளமேகப் புலவர் பாடல் வருமாறு :-

தட்சன், சுந்தரர்:

இக்கோயிலின் வெளியே தனிக்கோயிலில் பார்வதியின் தந்தையான தட்சன் சாபம் பெற்று ஆட்டுத்தலையுடன் காட்சியளிப்பதைக் காணலாம். இது மிகவும் சிறிய சிலை. தற்போது சற்று சேதமடைந்தது போல் தெளிவற்ற உருவத்துடன் உள்ளது.

ஆனால், திருவாரூருக்கு ஒரு மன்னனால் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருக்க விரும்பாமல், ஒரு அர்ச்சகரின் உதவியோடு மீண்டும் ஆலங்குடிக்கே திரும்பிய சுந்தரர் சிலை அற்புதமாக கோயிலுக்குள் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் இந்த சிலையும் இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் அம்மைத் தழும்புகள் சிலையில் இருப்பதைக் காணலாம்.

மாதா, பிதா, குரு:

இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது அம்மன் சன்னதி. அடுத்து சுவாமி சன்னதியைப் பார்க்கலாம். இதன் பிறகு குரு சன்னதி வரும். மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

தல வரலாறு:

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.

அமைவிடம்:

திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரோட்டில் 30 கி.மீ., தொலைவில் ஆலங்குடி அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு. கும்பகோணத்தை மையமாக வைத்தும் சென்று வரலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

கும்பகோணம்