download

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.  அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய வரலாற்றில் இவ்வாறாக தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணைய விசாரணையிலும் அந்த இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இரைத்த தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அந்த இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு,  தேர்தல் ஜூன் 13-ம் தேதி நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆகவே அந்த இரு தொகுதிகளைத் தவிரத்தி மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு கடந்த மே 16-ல் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 13-க்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஜூன் 1-ல் இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்துக்கு யோசனை தெரிவித்தார்.
ஆனால் ஆளுநர் பரிந்துரையைப் தேர்தல் ஆணையம் புறக்கணித்தது.  “தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணம் தாராளமாக  புழங்கியது. தற்போதும் சூழல், இயல்பு நிலைக்கு வரவில்லை.ஆகவே இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் இப்போதைக்கு ரத்து செய்வதே சிறந்தது.  குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், மத்திய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அளித்த அறிக்கையின்படி அந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி வட்டாரம் தெரிவித்தது.
பணம் விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.