சென்னை
பல்கலைக்கழக நிர்வாக விவகாரத்தில் யுஜிசி தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
பல்கலைக் கழக மானியக் குழுவின் ( University Grant Commission) செயலாளர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதமொன்றினை 20-10-2020 அன்று அனுப்பி இருக்கின்றார். தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் ( Governance Reforms) குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அக் கடிதத்தை எழுதியிருக்கின்றார்.
அந்த கடிதத்தில்,
”UGC என்பது பல்கலைக் கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் கல்வி ( Academics) மற்றும் அதன் தரம் குறித்த விஷயங்களில் நெறிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பே தவிர, நிர்வாக விஷயங்களில் (Administration) மூக்கை நுழைப்பதற்கு அதிகாரம் கொண்ட நிறுவனம் அல்ல. நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது மாநில அரசின் பொறுப்பாக இருக்கும் போது, UGC செயலாளர் நேரடியாகத் துணை வேந்தர்களுக்குக் கடிதம் எழுதுவது அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் ஓர் அமைப்பு, மாநில அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களின் நிர்வாக விஷயங்களில் தலையிடும் அதிகாரத்தை யார் அளித்தது?
குறிப்பாகத் தமிழ் நாடு அரசு, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்னரே அக் கொள்கையை அமல் படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள நிலையில், இப்போதே அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் நேரடியாகப் பல்கலைக் கழகங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மாநில அரசின் உரிமையில் தலையிடும் மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.”
எனமுன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்