தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.

சீனாவின் ஒத்துழைப்புடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் தலைமையில் மலேசியாவில் இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் துவக்கிவைப்பார் என்று கூறப்படுவதை அடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது.

வன்முறை தொடர்ந்தால் வாஷிங்டனுடனான அடுத்தடுத்த வர்த்தக ஒப்பந்தங்கள் கைவிடப்படும் என்று தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வரை இருநாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து இராணுவ துணை செய்தித் தொடர்பாளர் கர்னல் ரிச்சா சுக்சுவானோன், திங்கள்கிழமை காலை வரை எல்லையில் பல்வேறு இடங்களில் சண்டை தொடர்ந்ததாக தெரிவித்தார்.

இரவு முழுவதும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்றதாகவும் இதுவரை 20 பொதுமக்கள் உட்பட மொத்தம் சுமார் 30க்கும் அதிகமானோர் பலியானதாகக் கூறப்படுகிறது, இதனால் எல்லையோர பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாய்லாந்து – கம்போடியா இடையே போர்… எல்லை பிரச்சனை தொடர்பான மோதலை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையீடு…