பாங்காக்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த மருந்து கண்டு பிடித்துள்ளதாகத் தாய்லாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்த வைரஸ் தாக்குதலால் சீனா முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகில் வேறு சில நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு சீனாவில் இருந்து சென்ற 19 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி தென்ப்ட்டது. இதையொட்டி இவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 71 வயதான மூதாட்டி ஒருவரும் உள்ளார். அவருக்குத் தாய்லாந்து அரசு கொடுத்த மருந்தின் மூலம் முழுமையாகக் குணம் அடைந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அந்த மூதாட்டியுடன் சேர்ந்து இதுவரை 8 பேர் இந்த மருந்தால் குணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 11 பேருக்குச் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த மருந்து புளூ காய்ச்சல் மற்றும் எச் ஐ வி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மருந்துகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாக்கபட்ட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
சீனாவில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மருத்துவ நிபுணர் இந்த தாக்குதலில் இருந்து குணமடைந்தோருக்கு மீண்டும் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே குணமடைந்த நோயாளிகள் மருத்துவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.