விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு முக்கிய நாட்களில் மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கும். அந்த வகையில் தற்போது, தை மாதம் பிறந்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை அன்று பிரதோஷமும், வருகிற சனிக்கிழமை அன்று அமாவாசையும் நடைபெற உள்ளது.
அதனால் நாளை முதல் ஜனவரி 22ம் தேதி வரை என 4 நாட்களுக்கு கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிலுக்குள் 10 வயதுக்குட்பட்டவர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட 4 நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்தாலோ, பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும். மேலும் பக்தர்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்க கூடாது என்றும் இரவில் கோவிலுக்குள் தங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு கூட்ட நெரிசலின்றி வருவதற்கு ஏதுவாக விருதுநகர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.