உறவுகள்கவிதை பகுதி 15

தேடுகிறேன்…

பா. தேவிமயில் குமார்

நேற்று வரை சேமித்த சில்லறை நினைவுகள்
சத்தம் இடுகின்றன, கனவுகளாக!

எந்த தடுப்புச் சுவரும் இல்லையே? கனவுகளை
கடந்து
சென்றிட..

நேற்றைய நினைவுகள்
இன்றைய எண்ணங்களோடு!!

நீள் வெட்டு,
குறுக்கு வெட்டு,
தோற்றம்,
கனவுகளுக்கில்லை!!!!

வெளியில் சொல்ல முடியா
கனவுகள்
வியாதியாகிறது!!!!!

சில கனவுகள்,
வாழ்க்கையை
வென்றிட
விரட்டுகிறது
மனிதனை!

கடலில்
கரை காணும்
மாலுமியாக
மனம் நகர்ந்து கொண்டே…..
மணித்துளிகள் தோறும்
பயணிக்கிறது

முதிய வயதின்
புதிய கனவுகள்
புதைக்கப்படும்
பாரமுகத்துடன்!

பருவ வயதின்
பகல் கனவு
பல முறை
பார்க்கப்படும்
நினைவுகளில்!

கனவு கலையும்போது
கலவரமான,
இரவுகள்
நீண்டு கொண்டே போகும்!!!!!

பார்க்காத காட்சிகளை
பார்த்த மனிதர்களோடு
இணைத்து
பார்க்கும்,,, கனவுகள்!!!

கனவின்
கத்திரிக்கோல்
வெட்டி விடுகிறது
காலங்களை
முன்னும் பின்னுமாக

முழு வாழ்க்கையையும்
வாழ்ந்திட
முயல்கிறான்
மூணு நிமிடத்தில்

கனவுகளை
கேட்டு வாங்கிட
தேவையில்லை!

கேட்கும்
கனவுகள்
வருவதே இல்லை!

கனவு இல்லாத
கதைகளை
கேட்க பிடிக்கவில்லை!

ஏதேன் தோட்டத்தின்
ஏதோ ஒரு நினைவு
இன்னும்
உயிர்ப்புடன்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது!

வாழ்வின் ஒரு பகுதி அல்ல…..
கனவின் முழு பகுதியே
வாழ்க்கை….

உறங்க மட்டுமல்ல
விழித்திடவும்
வேண்டும் கனவுகள்….

அவசர வாழ்க்கை அள்ளி போட்ட
மிச்சத்தில் …
தினம்,தினம்
தேடிப்பார்க்கிறான்…

வாழ்வின் கனவுகள் ஏதேனும் …….

மாற்றபட்டதா நிஜமாக
என…..

இப்படிக்கு.
கனவுகளில் வாழும் மனிதர்கள்