கொழும்பு
சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எழுந்த மக்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலகினார்.
இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார். ஆகவே புதிய அதிபரைத் தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுப் பதவியேற்றார்.
இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து கலைப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,
”அதிபர் மாளிகை அற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய தொல்பொருட்கள் உட்பட குறைந்தது 1,000க்கும் அதிகமான பெரும் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போயுள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணையைத் தொடங்க சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன”
எனக் கூறப்பட்டுள்ளது.