கான்பூர்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த தொடர் இந்தியாவின் 500வது தொடர் என்பது சிறப்புக்குறியது.
கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனைப் படைத்து உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை தனதாக்கி உள்ளார்.
உலக அளவில் குறைந்த போட்டிகளில் 200-வது விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.
37 டெஸ்ட் விளையாட்டு போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். கனே வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து இந்த சாதனையை எட்டினார். அஸ்வின் கான்பூர் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 193 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்கில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்த நியூசிலாந்து அணி 262 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. நியூசிலாந்து கடைசி 7 ரன்களுக்கு 5 விக்கெட் விழுந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 56 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2–வது இன்னிங்சை தொடங்கியது.
3–வது நாள் முடிவில் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, மொத்தமாக 215 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. 4–வது நாள் ஆட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு தொடங்கியது.
நேற்றைய போட்டியில் வேகமாக ஆடிய இந்தியா, 5 விக்கெட்கள் இழப்பிற்கு 377 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா அரைசதம் அடித்ததும் கோலி டிக்ளர் செய்தார்.
இதனையடுத்து நியூசிலாந்துக்கு 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் தொடங்கியது. ஆனால் இன்றும் நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் ரன் எதுவும் எடுக்காமலும், லாதம் 2 ரன்களிலும் அவுட் ஆனார்கள். வில்லியம்சன் 25 ரன்களில் அவுட் ஆனார். டெய்லர் 17 ரன்களில் ரன் அவுட். இதனையடுத்து ரோன்ஜி மற்றும் சான்ட்னெர் பேட்டிங் செய்து விளையாடி வந்தனர்.
இந்திய பந்து வீச்சு வீரர் ரவிந்திர ஜடேஜே வீசிய 10 ஓவரில் 8 ஓவர்கள் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் மொத்தம் 14 ரன்கள் கொடுத்துள்ளார். அவர் வீசிய கடைசி 7 ஓவர்களில் ரன்கள் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய கடைசி 48 பந்துகளில் ஒரே ஒரு ரன் எடுக்கப்பட்டது. அதுவும் நோ பால் வீசியதில் இருந்து அந்த ரன் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 37 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 341 ரன்கள் தேவை. நாளைய போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமடையும் நிலை உள்ளது.