ஸ்ரீநகர்:
காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொலை செய்து பணத்தை பயங்கரவாதிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறைந்தது. இருப்பினும் பயங்கரவாதிகள் வங்கிகளை குறிவைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். பணப்புழக்கம் சீரடைந்ததும் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கிடையே இந்திய பாதுகாப்பு மற்றும் விசாரணை முகமைகள் பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் காஷ்மீருக்கு பணம் வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு காரணமாக பயங்கரவாதிகளுக்கு தற்போது பண பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
இதனால் வங்கிகளை இலக்காக கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் குல்காம் மாவட்டத்தில் இன்று வங்கி பணத்தை வேனுடன் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற 4 போலீசார் மற்றும் 2 வங்கி அதிகாரிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்து சென்றனர்.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட பிரிவினைவாதிகள் சம்பளம் வழங்கி வருகிறார்கள். பயங்கரவாத மற்றும் கல்வீச்சு சம்பவங்களுக்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.