காபூல்:

ப்கானிஸ்தானில் நடந்த  இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் 23 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தின் பாலாபுளுக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் ஒன்று இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த ராணுவ தளத்துக்குள் தலீபான் பயங்கரவாதிகள் கூட்டமாக நுழைந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் 18 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

இது குறித்து அவர், ‘‘ வெள்ளிக்கிழமை இரவு பெரிய கும்பலாக வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாலாபுளுக் ராணுவ தளத்தில் நடத்திய தாக்குதல்களில் 18 ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். அங்கு படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன’’ என்றார். .

இந்த தாக்குதல்களுக்கு   தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று விட்டதாக மாகாண துணை கவர்னர் யூனூஸ் ரசூலி தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு உண்மை கண்டறியும் குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களின் சுவடு மறைவதற்கு முன்பாக தலைநகர் காபூலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நேற்று காலை தனது உடலில் கட்டியிருந்த  குண்டுகளை வெடிக்க வைத்தார்.

இந்த தாக்குதல், நேட்டோ படைகளின் அலுவலகம் அமைந்து உள்ள பகுதியில் நடந்தது. இதில் ஐந்து  பேர் உயிரிழந்தனர்.