பாரமுல்லா
பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் ஆதார் அட்டையை பெற்றதால் பெருமை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் வருடம் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட காஷ்மீர் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு அரசால் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தேதியான பிப்ரவரி 14 அன்று அவர் நினைவாக பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு புல்வாமாவில் தற்கொலைப்படைதாக்குதல் நடத்தியது. அதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத்தில் இருந்து விலகி அப்சல் குருவின் 18 வயது மகன் காலிப் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் வசித்து வருகிறார். காலிப் தனது தாய் வழி பாட்டனார் குலாம் முகமது மற்றும் தாயார் தபசூம் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவருக்கு தற்போது இந்திய அரசின் ஆதார் அட்டை வழங்கப்பட்டுளது. இதனால் காலிப் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காலிப், “எனக்கு இந்திய நாட்டின் ஆதார் அட்டை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் இந்திய பாஸ்போர்ட் பெற்று நான் முழுமையாக இந்தியக் குடியுரிமை பெறுவேன். கடந்த காலத்தில் நடந்த தவறுகளின் மூலம் நாம் பல பாடங்களை கற்கிறோம். எனது தந்தையால் அவருடைய மருத்துவப் பட்டத்தை பெற முடியாத நிலை அப்போது ஏற்பட்டது. நான் மருத்துவராகி அவர் கனவை நிறைவேற்ற உள்ளேன்.
இதற்காக நான் வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு எழுத உள்ளேன். எனக்கு அதன் மூலம் இந்திய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. நான் நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை எனில் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் சேருவேன். எனக்கு துருக்கி நாடு உதவித் தொகையுடன் மரூத்துவக் கல்வி அளிக்க தயாராக உள்ளது.
என்னையும் தீவிர வாத இயக்கத்தில் இணைக்க பல அமைப்புகள் முயற்சி செய்தன. ஆனால் எனது தாயார் தபசூம் அதற்கு இடம் அளிக்கவில்லை. என்னை தீவிரவாதக் குழுக்களின் பார்வையில் இருந்து அவர் தனித்து வைத்தார். நான் மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன். எனது தாய் விரும்பிய படி இந்திய குடிமகனாக வாழவே விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.