புதுச்சேரி:
புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது.
புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவகுமார் கடந்த ஜனவரி மாதம் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டர். அதைத் தொடர்ந்து பல கொலைகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று தீபாவளியையொட்டி, புதுவை முத்தரையர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் நாய் சேகர், ஜெரால்டு, சதீஷ் ஆகியோர் தங்களது நண்பர் மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையை சேர்ந்தவர் புளியங்கொட்டை ரங்கராஜ் மற்றொருவருடன் சேர்ந்த மேட்டுப்பாளையம் ராம் நகரில் உள்ள இரும்பு பீரோ செய்யும் கம்பெனிக்குள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதை அறிந்த மற்றொரு கும்பல் நள்ளிரவு 11.30 மணி அளவில் அந்த கம்பெனியை சுற்றி வளைத்தது. அவர்களை நோக்கி சரமாரி யாக வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் ஜெரால்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தப்பித்தவர்கள் காயங்களுடன் ஓடினார்கள். ஆனார், அவர்களை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் நாய்சேகர், சதீஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அவர்களை கொலை கும்பல் விரட்டி சென்றது. ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட 3 பேருடைய பிணத்தையும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த புளியங்கொட்டை ரங்கராஜ் என்பவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரவுடிகள் ஜெரால்டு, சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் ரவுடி பொரையூர் சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். கொலையாள ரவுடிகள் 3 பேர் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.