திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியபோது வடமாநில மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பயிற்சி என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் வெளிமாநிலங்களை சேர்ந்த 172 பேர் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியின் விடுதியில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆதித்யா சர்மா (வயது 20) என்பவர் தங்கி 3-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, விடுதியில் இருந்த சக மாணவர்களுடன் சேர்ந்து ஆதித்யா சர்மா கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தார்.
அப்போது, விழாவில் 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஒருவரையொருவர் கைகளால் பலமாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதல் முற்றவே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் கால் பகுதியை உடைத்து அங்கிருந்த ஆதித்யா சர்மாவின் கழுத்தில் பலமாக குத்தினர்.
இதில் பலத்த ரத்த காயத்துடன் அவர் சரிந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆதித்யா சர்மாவை மீட்டு, உடனடியாக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஷோபாதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட அங்குள்ள மாணவர்களை அழைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அந்த கல்லூரி விடுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.