பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், இரண்டாவது சுற்றில் விளையாடுவதற்கு முன்னதாக, நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காயம் அடைந்த காரணத்தால் தொடரிலிருந்து விலகினார்.
தற்போது பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் – பல்கேரியாவின் பிரன்கோவா எதிர்த்து விளையாடவிருந்தனர். ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, செரினாவுக்கு குதிகாலில் காயம் ஏற்பட்டது.
எனவே, போட்டியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார் செரினா வில்லியம்ஸ். இதனையடுத்து, பிரான்கோவா வென்றதாக அறிவிக்கப்பட்டு 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதனால், அமெரிக்க ஓபன் போலவே, பிரெஞ்சு ஓபனிலும் ஏமாற்றத்துடன் வெளியேறினார் செரினா.
மற்றொரு மகளிர் ஒன்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனையான பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்கா, சுலோவேகியாவின் கரோலினாவிடம் தோற்று 2வது சுற்றுடன் வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில், ஸ்பெயினின் ரபேல் நாடல் மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.