ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று அவரது தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருகிராம் செக்டார் 57-ல் வசித்து வரும் 25 வயதான ராதிகா யாதவ் மாநில அளவில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இவர் ஸ்காட்டிஷ் உயர்நிலை சர்வதேச பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து டென்னிஸில் ஆர்வம்காட்டி வரும் இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தான் பங்கேற்கும் போட்டிகள் மற்றும் அதில் பெற்ற வெற்றிகள் குறித்து தனது தந்தை தீபக் யாதவ் உடன் கூடிய புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் குருகிராமில் டென்னிஸ் பயிற்சி அகாடமி ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில் பயிற்சி அகாடமி துவங்கியதில் தந்தைக்கும் மகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது.

அதேவேளையில், தீபக் யாதவின் உறவினர்கள் சிலர் மகளின் வருமானத்தில் வாழ்ந்துவருவதாக கூறி அவரை ஏளனமாக பேசியுள்ளனர்.

இதனால் கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தில் இருந்த தீபக் யாதவ் நேற்று காலை 10:30 மணியளவில் தங்கள் வீட்டு சமயலறையில் இருந்த ராதிகா யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

மொத்தம் ஐந்து குண்டுகள் சுட்ட நிலையில் அதில் மூன்று குண்டுகள் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் காவல்துறைக்கு தகவலளித்த நிலையில் தீபக் யாதவ் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராதிகா யாதவின் தாய் மஞ்சு யாதவ் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக தீபக் யாதவ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் “தனது கௌரவத்தை கெடுத்ததால் அவமானத்தை தாங்க முடியாமல்” மகளை தீபக் யாதவ் சுட்டுக்கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.