மதுரை:
னத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்,  உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்து  மரணம் தொடர்பாக  பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தென்காசி விவசாயியின் உடலை அவசர அவசரமாக இரவு நேரத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசி விவசாயி உயிரிழப்பு தொடர்பாக, அவரது மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடத்திருந்தார். மனுவில்,  எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். கடந்த  ஜூலை 22-ம் தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறை நெல்லை நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதை அறிந்து எனது மகன் நடராஜன் சிவசைலம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றபோது எதிர்புறத்தில் வன அலுவலர்கள் வாகனம் வந்துவிடவே உடனடியாக வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் திடீரென உயிர் இழப்பு ஏற்படு வதற்கான வாய்ப்பு இல்லை. இதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஜூலை 23ல்மகன் நடராஜன் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து,  நீதித்துறை நடுவர் விசாரணையில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் குடும்பத்தாரிடமும் நீதித்துறை நடுவர் கையெழுத்து பெற்று கொண்டார்.
இந்த நிலையில் 24ந்தேதி உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில்,  23-ம் தேதி இரவே அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில்,  அணைக்கரை முத்துவின் உடலை தடய அறிவியல் துறை மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்யவும், தொடர்புடைய வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்”  தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.  இரு தரப்பு வாதத்தைத் தொடர்ந்து,  உடற்கூறாய்வு எப்போது நடைபெற்றது? எனக்  அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத்தரப்பில் 23-ம் தேதி இரவு 9 மணிக்கு உடற்கூறாய்வு முடிந்தது” என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கோபமடைந்த நீதிபதி,  தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் எவ்வாறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத்தரப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தரப்பில், அணைக்கரை முத்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையில் விரைவாக பிரேதப் பரிசோதனை செய்யுமாறு நெல்லை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை அறிக்கையை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், தென்காசி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.