சென்னை:
மணல் குவாரிகளுக்கு தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், நாளை டெண்டர் கோரப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.
இன்றைய கேள்வி நேரத்தின்போது, மணல் குவாரிகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், பொதுநல வழக்குகளால் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதன் காரணமாக புதிய மணல் குவாரிகளை திறக்க நாளை டெண்டர் கோரப்பட உள்ளது என்றும், புதிய மணல் குவாரிகள் திறந்து தட்டுப்பாடு இல்லாமல் மணல் விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும், வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்து ஆன்லைனில் அரசே விற்பனை செய்யும் என்ற முதல்வர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் கலப்படம் செய்யப்பட்ட மணலா என்றெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரே மக்களுக்கு விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.