பெங்களூரு: தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களில், 5 கடிதங்கள் மட்டுமே சட்ட விதிமுறைகளின்படி உள்ளதாகவும், மற்றவை ஏற்கப்பட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார்.
மேலும், சம்பந்தப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் விருப்பப்படிதான் ராஜினாமா செய்தார்களா? என்பதையும் தான் அறிய விழைவதாக அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளதால், குறிப்பிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் ராஜினாமா கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்களை முறையாக எழுதி சமர்ப்பித்திருக்கும் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும் வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் நேரில் சந்தித்து காரணம் கேட்கவுள்ளார் சபாநாயகர்.
மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான ரோஷன் பெய்க்கின் ராஜினாமா கடிதம், ஜுலை 9ம் தேதி காலையில்தான் கிடைத்ததாக தெரிவித்துள்ளார் ரமேஷ் குமார்.
கர்நாடகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் தொடர்பாக, கவர்னர் வாஜுபாய் வாலா, தனக்கு 2 கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அதில் எந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரும் இதுவரை தன்னை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார் சபாநாயகர்.
இதுதவிர, தான் அரசியல் சட்டப்படி முறையாக செயல்படுவதாக தன் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறினார் சபாநாயகர் ரமேஷ்குமார்.
சபாநாயகரின் இத்தகைய நடவடிக்கைகள், கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குமாரசாமி அரசுக்கு சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.