ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ராமேஸ்வரம் மக்களின் ராமநாதசுவாமி கோயில் வழிபாட்டு உரிமை மீட்க கோரி கோயில் நுளைவு போராட்டம் இன்று நடைபெற்றது. காவல்துறையினரின் தடுப்புகளை தாண்டி 500 க்கும் மேற்பட்டவர்கள் சென்ற நிலையில், அவர்களை மறித்து காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்களும், உள்ளுர் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை பொறுப்பேற்றுள்ளார். இவர், உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த வழித்தடத்தில் தரிசனத்துக்குச் செல்ல தடை விதித்ததுடன் கட்டண வழித்தடம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.
கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். இதையடுத்து அங்கு மேலும் போலீஸ் அதிகரிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். மக்கள் நல பேரவை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி மேற்கு கோபுர கோயில் வழியாக தடுப்புகளை தாண்டி 500-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மூன்று இடங்களில் தடுப்புகள் அமைப்பு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர். பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் ராமநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.