புதுடெல்லி: கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், சராசரி வெப்பநிலையானது, இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதற்கிடையே, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தணிந்து காணப்படுவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்; இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை 36.61 டிகிரி செல்ஷியஸ். இதேபோல், இரவு நேரத்திலும் குளிர் இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில், சராசரியான குறைந்தபட்ச வெப்பநிலை 19.6 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், இரவு வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருந்தது.
இந்த ஆண்டு அதிகப் புயல் சின்னங்கள் உருவானதால், நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது. இந்த மார்ச் மாதம் 109.67 மி.மீ. மழைப் பதிவானது. இதுவே, வெப்பநிலை கணிசமாக குறைவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.