டில்லி:

மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு மீது தெலுங்குதேசம் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆந்திராவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக, ஆந்திர மாநில கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

பாஜகவின் நெருங்கிய கூட்டாளியுமான தெலுங்குதேசமும், பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது

இந்நிலையில்,  , மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அதைடுத்து  கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக நோட்டீசும் அளித்தது.

அதே நேரத்தில் பிஎன்பி மோசடி மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

இதனால் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட கூட்டத் தொடர் கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  கடந்த  10 நாட்களாக  இரு அவைகளும் முடங்கி உள்ள  நிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்பு இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில்  இன்று  கொண்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சபை அமளி காரணமாக,  ஆதரவு எம்.பிக்கள் குறித்து கணக்கிட முடியவில்லை என்று கூறி அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்த்தார் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தக்கது.