ஐதராபாத்,
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை முமைத்கான், போதை பொருள் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று விசாரணை குழுவினர் முன்பு ஆஜரானார்.
ஆந்திராவை கலக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மூலம் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்பட 12 பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது .
இதில், நடிகை முமைத்கானுக்கு ஜூலை 22-ந்தேதியை விசாரணைக்காக ஒதுக்கினார்கள். ஆனால், விசாரணைக்கு வர சொல்லி தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை என முமைத்கான் கூறியிருந்தார்.
அதையடுத்து போலீசார்,பிக் பாஸ் நிர்வாகத்தினருக்கே நோட்டீஸ் அனுப்பினர். அதில் முமைத்கான் இன்று விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு முமைத்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தநிலையில் ஹைதராபாத் வந்த முமைத்கான், இன்று காலை நாம்பல்லியில் உள்ள போதை பொருள் ஒழிப்பு விசாரணை குழு முன் ஆஜரானார்.