குரங்கைத் தூக்கிலிட்ட கொடூர ஜென்மங்கள்….
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சேத்துப்பள்ளி அருகேயுள்ள வெம்சூர் தொகுதியின் கீழ் உள்ள அம்மபாலம் கிராமப்பகுதிகளில் குரங்குகளின் படையெடுப்பு மிக அதிக அளவில் ஆனதைத் தொடர்ந்து இவை அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று அக்கிராமவாசிகளிடம் சிக்கிய ஒரு குரங்கினைப்பிடித்து, துடிக்கத் துடிக்க ஒரு மரத்தில் தூக்கிலிட்டுள்ளனர். மற்ற குரங்குகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்குமென்று கருதி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் இக்கிராமவாசிகளில் மூவர்.
மரத்தில் தூக்கிலிடப்பட்ட குரங்கு கடுமையாகப் போராடித் துடிதுடித்து உயிரை விடுவதையும், இதனை உள்ளூர் மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ஆரவாரம் செய்வதையும் இந்த வீடியோவில் காணலாம். மேலும் இந்த கொடூர சம்பவத்தைத் தடுக்க சில நாய்க் குட்டிகள் முயற்சிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சாத்துப்பள்ளி வனத்துறை அதிகாரி வெங்கடேஸ்வரலு கூறுகையில், இம்மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் இவர் கூறுகையில் அப்பகுதியின் உள்ள வனப்பகுதியில் 30% காடுகளில் பழ வகைகள் போன்றவற்றைப் பயிரிடுவதற்கு அரசு புதிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் இது அப்பகுதியில் வாழும் குரங்கு போன்ற மற்ற உயிரினங்களுக்கு போதுமான உணவு கிடைக்க வழி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாயில்லா ஜீவன் ஒன்று இதுபோல கொடூரமாகத் துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டு வீடியோவாக பதியப்பட்டுள்ளது பார்ப்பவர்கள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.
லட்சுமி பிரியா