கரீம் நகர், தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு சண்டை சேவல் வளர்த்தவரைக் கொன்றதால் காவல்துறையினர் சேவலை பாதுகாத்து வருகின்றனர்.
தென்னக மாநிலங்களில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஆட்டுக் கிடா சண்டை, சேவல் சண்டை போன்றவை பிரபலமாகும். தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானதாகும். இம்மாநிலங்களில் திருவிழா நேரங்களில் சேவல் சண்டை போட்டிகள் அதிக அளவில் நடந்து வந்தன.
விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கூறி விலங்கு நல ஆர்வலர்கள் கிடா மற்றும் சேவல் சண்டைகளுக்குத் தடை வாங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கும் இதே நிலை ஏற்பட்ட போது அந்த தடை நீக்கப்பட்டு தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் சேவல் சண்டை போன்றவற்றுக்குத் தடை உள்ளது. ஒரு சில இடங்களில் சட்ட விரோதமாக இந்த போட்டிகள் நடக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தில் லோத்தனூர் என்னும் சிற்றூரில் சட்டவிரோதமாகச் சேவல் சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சதீஷ் என்பவரின் சேவலும் சண்டைக்குத் தயாராக இருந்தது. இந்த சேவலைச் சண்டைக்கு விடும்போது சேவல் மிரண்டு சதீஷின் இடுப்பில் பாய்ந்துள்ளது. சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி சதீஷின் இடுப்பில் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வெள்ளத்தில் விழுந்த சதீஷை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது அவர் வழியில் உயிர் இழந்தார். இதையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சேவல் சண்டை நடத்தியவர்களை தேடி வருகின்றனர். கொலையாளி என்ற பெயரில் சேவலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதைப் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.