தராபாத்

தெலுங்கானா மாநில கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமி மாணவர்களுக்காக ஜப்பானில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாட்டின் முட்டை உற்பத்தியில் தெலுங்கானா மாநிலம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.   இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தெலுங்கானா முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தெலுங்கானா மாநில தலைநகரில் அமைந்துள்ள கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமி என்னும் விளையாட்டு பயிற்சி நிலையம் வரும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.   இந்த அகாடமி தனது மாணவர்களுக்காக ஜப்பானில் இருந்து விசேஷ முட்டைகளை இறக்குமதி செய்து அளித்து வருகிறது.   இதற்கான காரணம் என்ன என அந்த பயிற்சி நிலையம் தெரிவிக்கவில்லை.

கடந்த 2016 ஆம் வருடம் தெலுங்கானா மாநிலத்தின் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும்  கறிக் கோழிகள் மீது உலக நாடுகள்  புகார்கள் தெரிவித்தன.  அதையொட்டி ஐதராபாத் பல்கலைக்கழகம் இந்த கோழிகளை பரிசோதித்தது.   அப்போது கோழிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் தரப்பட்டு வேகமாக வளர்க்கப்படுகின்றன எனவும், அதனால் அதை சாப்பிடும் மனிதர்களுக்கு பக்க விளைவுகள் உண்டாகும் எனவும் தெரிவித்தது.

கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமிக்கு முட்டைகளை விற்பனை செய்யும் ஜப்பான் நிறுவனம் இது குறித்து எதுவும் குறிப்பிடாமல் தங்கள் நிறுவனம் விற்கும் முட்டைகள் மற்றும் கோழிகளுக்கு எந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தும் அளிக்கவில்லை என்பதை மட்டும் தெரிவித்துள்ளது.