தெலுங்கானாவில் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டது : முதல்வர் அதிரடி..

Must read

தராபாத்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒன்று முதல் 12 வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாகப்பட்டதாக அறிவித்துள்ளார்.

கர்னாடகா மாநிலத்தில் கன்னட மொழியும், கேரள மாநிலத்தில் மலையாளமும் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது தெரிந்ததே.  அந்த வரிசையில் தற்போது தெலுங்கானாவும் இணைந்துள்ளது.  இது குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் உள்ளதாவது :

”இனி ஒன்றாம் வகுப்பு முதல், பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டுள்ளது.  தெலுங்கு கற்றுத் தரப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படும்.  தெலுங்கு கற்பிக்காத பள்ளிகள் இனிமேல் இயங்க முடியாது.  உருது படிக்க விரும்புவோருக்கு அது மற்றொரு மொழியாக கற்பிக்கப்படும்.  தெலுங்கு மொழி பாட திட்டத்தை சாகித்ய அகாதமி தயாரித்து வழங்க உள்ளது.  இனி அந்த பாடதிட்டத்தின் படி அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கற்பிக்கப்படும்.

அதே போல கடைகளில் போர்டுகளும், தெருவில் மற்றும் பொது இடங்களில் உள்ள பெயர் பலகைகளும் தெலுங்கில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.  அந்த கடைகளின் உரிமையாளர்கள் விரும்பினால் மற்ற மொழிகளிலும் கூடுதலாக போர்டுகளில் எழுதிக் கொள்ளலாம்.

தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக உலக தெலுங்கு மாநாடு வரும் டிசம்பர் 15, 16 தேதிகளில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது.  இதற்காக அரசு சார்பில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த மாநாட்டில் தெலுங்கு மொழியின் வளர்ச்சிகள் பற்றி விவாதிக்கப்படும்.” என முதல்வர் கூறி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு மொழியை ஆந்திராவில் கட்டாய மொழியாக்க சட்டம் கொண்டுவரப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

More articles

Latest article