ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 47 நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து அதிர்ச்சியளித்தது அம்மாநில அரசு.
தனியார் உதவியுடனும், ஒப்பந்த அடிப்படையில் பல பேருந்துகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இதனால் தேவையை சமாளிக்க முடியவில்லை. அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் தொழிலாளர் விஷயத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் மனமிறங்கவில்லை. போராட்டத்தை ஒடுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 5 பேர், தற்கொலையும் செய்துகொண்டனர். இந்நிலையில், சாதகமாக எதுவும் நடக்காததால், தங்களின் போராட்டத்தைக் கைவிடும் திட்டத்திற்கு வந்துள்ளன தொழிலாளர் யூனியன்கள்.
அதேசமயம், போராட்டத்தைக் கைவிட வேண்டுமெனில், தங்களின் டிஸ்மிஸ் உத்தரவை அரசு எந்த நிபந்தனையுமின்றி வாபஸ் பெற வேண்டுமென அவர்கள் கடைசி நிபந்தனையை வைத்துள்ளனர். ஆனால், இதற்கும் அரசு தரப்பிலிருந்து உடனடி பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.