தெலுங்கானா:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை மே 17-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது. இந்நிலையில் தெலுங்கான மாநிலத்தில் கொரோனவால் ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,மேலும் அங்கு கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்களின் உயிருடன் என்னால் விளையாட முடியாது. தெலுங்கானாவில் நாளுக்குநாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதிலும் மொத்த மாநிலத்தில் சுமார் 66 சதவீதம் அளவுக்கு ஹைதராபாத் பகுதியில் பதிவாகியுள்ளது. சமூக பரவல் என்ற நிலையை அடைந்து விடாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்து இருந்தாலும், சிவப்பு மண்டல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட மாட்டாது. இது மதுபான கடைகளுக்கும் பொருந்தும். சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டுமே இயங்கும். எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர் மற்றும் சிமெண்ட் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவை மட்டும் திறந்து இருக்கலாம் என்றார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அவர் தெரிவித்தார். மேலும், மாநில தலைநகர், ஹைதராபாத் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான ரங்காரெட்டி மற்றும் மல்காஜிகிரி-மேட்சல் மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் அண்டை மாநில எல்லை பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்