ஐதராபாத்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் இன்று நிறைவேறியது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக 10க்கும் அதிகமான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல மாநிலங்களிலும் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், தெலுங்கானா சட்டசபையில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு சிஏஏ குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
ஏராளமான மக்களின் பெயர்கள் விடுபட்டு போவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மதம் மற்றும் வெளிநாடு தொடர்பான அம்சங்களை நீக்குமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.