பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை என்று பேசியுள்ளார் பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா.
இவரின் கருத்துகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
கர்நாடக மாநிலத்திற்கான வெள்ள நிவாரண நிதி சரியான நேரத்தில் மத்திய அரசிடமிருந்து வராதது, முதலமைச்சர் எடியூரப்பாவை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்காதது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “14வது நிதி கமிஷனின் மூலமாக, கர்நாடக மாநிலத்தை மத்திய அரசு ஏற்கனவே வலிமையுள்ளதாக மாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
“முதல்வர் எடியூரப்பா வெள்ளம் பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார். அவர் நிவாரணங்களை அறிவித்து வருகிறார் மற்றும் புனரமைப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
எனவே, இந்த சூழலில் பிரதமர் மோடியை குற்றம் சாட்ட வேண்டிய அவசியமில்லை” என்றுள்ளார் தேஜஸ்வி சூர்யா.
ஆனால், இவரின் இந்தக் கருத்துக்கு அவர் சார்ந்த தரப்பிலிருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.