டெல்லி

விவசாயிகள் டெல்லி நோக்கி மேற்கொண்ட பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். எனவே 2021 ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றதுடன் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதுவரை அதற்கு தீர்வு காணப்படாததால் இதனை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லி எல்லையில் முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணி செல்ல இருந்தனர்.

டெல்லியில் விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விவாசாயிகளின் வாகனங்கள் ஷம்பு எல்லையைக் கடக்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டு,  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தநிலையில் அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் டெல்லியை நோக்கிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைத்ததால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.