துபாய் :
ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் நிலையில், நேற்று நடந்த 2 வது போட்டியில், மும்பை அணியுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து பிளே ஆப் சுற்றில் விளையாடும் தகுதியை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நேற்று பிற்பகல் நடந்த முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை அபாரமாக வென்ற சிஎஸ்கே அணி இரண்டாவது சுற்றில் நுழைவதற்காக இருந்த இறுதி கனவை ராஜஸ்தான் ராயல் அணி கலைத்தது.
இதுவரை, 13 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாதது இதுவே முதல் முறை.
நேற்றைய போட்டிகளின் முடிவில் அணிகளின் தரவரிசை படி ‘பிளே ஆப்’ எனும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய முதல் நான்கு அணிகளில், மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா இடம் பெற்றிருந்தாலும், சிஎஸ்கே தவிர பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய மூன்று அணிகளுக்கும் அடுத்த சுற்றில் நுழைய கூடிய வாய்ப்பு இன்னும் உள்ளது.
தற்போது முதல் நிலையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியிலாவது வெற்றிபெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.
மும்பை அணியை தோற்கடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று 6 வது இடத்திற்கு முன்னேறினாலும், பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் வரவிருக்கும் போட்டிகளில் விளையாடுவதை பொறுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது.
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | ரன் ரேட் |
மும்பை இந்தியன்ஸ் | 11 | 7 | 4 | 14 | 1.252 |
டெல்லி காபிடல்ஸ் | 11 | 7 | 4 | 14 | 0.434 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 11 | 7 | 4 | 14 | 0.092 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 11 | 6 | 5 | 12 | -0.476 |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 11 | 5 | 6 | 10 | -0.103 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 12 | 5 | 7 | 10 | -0.505 |
சன் ரைஸர்ஸ் ஐதராபாத் | 11 | 4 | 7 | 8 | 0.029 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 12 | 4 | 8 | 8 | -0.602 |
இதனால், மீதமுள்ள 11 போட்டிகளும் பல்வேறு அணிகளின் தரவரிசையை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால், இந்த போட்டிகள் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் லீக் சுற்று போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 5 ம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ‘முதல் தகுதி போட்டி’யில் மோத இருக்கின்றன.
மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகள் 6-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ‘வெளியேற்றும் சுற்றில்’ விளையாட இருக்கின்றன.
‘இரண்டாவது தகுதி போட்டி’யில் முதல் தகுதி போட்டியில் தோற்ற அணியும், ‘வெளியேறும் சுற்றில்’ வெற்றிபெற்ற அணியும் பலப்பரீட்சையில் இறங்கும், இந்த போட்டி அபுதாபியில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டி துபாயில் நவம்பர் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது. அடுத்த 16 நாட்களில் நடைபெற இருக்கும் இந்த 15 போட்டிகளும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையவிருக்கிறது.