லாகூர்,
பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் வகுப்பறையை சுத்தம் செய்யாத மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார் கொடூர மனம் படைத்த ஆசிரியர் ஒருவர்.
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர்.
இவரை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர்.
ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தற்போது சுத்தம் செய்யமுடியாது என்றும் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை தாக்கியுள்ளனர். பின்னர் பள்ளியின் 3வது தளத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
கீழே விழுந்த மாணவி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இரண்டுபேரையும் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
அவர்கள்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.